உடற்பயிற்சி அவசியம் ஏன்? செய்யாவிடில் என்ன ஆகும்?


எந்த வயதானாலும் ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி மிக மிக அவசியம். இயந்திர உலகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதனால் உடற்பயிற்சி செய்வது என்பது இயலாத காரியமாகிப் போனது. ஆனால் உண்ட உணவு செரிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் கட்டாயம் உடற்பயிற்சி அவசியம் என்கிறது ஒரு ஆய்வு.

உடற்பயிற்சி ஒருவரை உற்சாகமாகவும், உறுதியாகவும் இருக்க வைக்கிறது. அந்த நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்கிட வைக்கிறது. இவை விஞ்ஞானம் கூறும் உண்மை. உடற்பயிற்சி என்றாலே ஒருவர் "ஜிம்" க்கு சென்று 2 மணி நேரம் எடை தூக்கி, கடினமான பயற்சிகள் செய்வது என்பது பொருள் அல்ல. குறைந்த பட்சம் ஒரு அரை மணி நேர நடை, அல்லது ஜாக்கிங், வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிதான எக்சர்சைஸ்கள்.

வாரத்தில் 5 நாட்கள் தினமும் பயிற்சி மேற்கொண்டால், அதன் விளைவுகளை நீங்களே உணர்வீர்கள். உடலில் அது தரும் நல்ல மாற்றத்தினை அனுபவிப்பீர்கள். நோய், நொடிகள் எதுவும் உங்களிடத்தில் அண்டாது. பயந்து ஓடிவிடும். குறிப்பாக இதயம் தொடர்பான நோய்கள் வரவே வராது. மற்ற நோய்கள் உங்களிடத்தில் வருவதற்கு அஞ்சும்.


நோய் வந்தவர்கள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், நோயின் வீரியம் குறைந்து, மிக விரைவில் ஆரோக்கியத்தைப் பெறுவர். வயதான பெரியவர்கள் உடற்பயிற்சி செய்வதனால், வயோதிகத்தால் ஏற்படும் உடற்தொடர்பான பிரச்னைகளை குறைத்து, நல்ல ஆரோக்கியத்துடன் அவர்களுக்கான வேலைகளை யாருடைய உதவியுமின்றி அவர்களே செய்துகொள்ளலாம்.

கழிவுகளை வெளியேற்றும் உடற்பயிற்சி:


உடற்பயிற்சி மூலம் வெளியேற்றப்படும் வியர்வையானது உடற்கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. உடல்நலத்தையும், அதன் செயல்பாடுகளையும் சீரமைப்பதுதான் உடற்பயிற்சி.

சர்க்கரை நோய், இதய நோய், உடற்பருமன் போன்ற பிரச்னைகளை உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

ஆடுதல், ஓடுதல், உட்கார்ந்து எழுதல், யோகாசனம், மிதி வண்டி ஓட்டுதல், நடத்தல், விளையாட்டு, பனிச்சறுக்கு என்பன போன்றவைகள் அனைத்தும் உடற்பயிற்சிகள் தாம்.

உடற்பயிற்சியின் மூலம் நுரையீரல் சுருங்கி விரிவடைவதால், அது போதிய பயிற்சி பெற்று நன்றாக வேலை செய்கிறது. இதனால் உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் பெற ஏதுவாகிறது. உடற்பயிற்சியின் போது இரத்த ஓட்டம் சீராகி, உடல் முழுவதும் போதுமான அளவிற்கு பரவுவதால் உடல் உறுப்புகள் அனைத்தும் புத்துணர்ச்சிப் பெற்று வேலை செய்ய துணைபுரிகிறது. மற்ற நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்கிட நுரையீரலுக்கு அது உதவிகரமாக இருக்கின்றது.

பெரும்பாலான மக்கள் உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை "உடற்பயிற்சி" க்கு கொடுப்பதில்லை. இதனால் உலகளவில் அதிகளவு "OBESITY" பிரச்னையால் அவதிப்படுகின்றனர். உடலை வளைத்து நெளித்து செய்யப்படும் யோகா, கால்களுக்கு அதிக வேலை கொடுத்து நடக்கும் நடத்தல், ஓடுதல், குதித்தல் போன்ற பயற்சிகளால் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து சக்தியாக மாற்றிப்பட்டு, உடல் வலிமை, பொலிவு கிடைக்கிறது.

எனவே உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் உடல் வலிமையடைந்து, நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சி அவசியம். சரியான முறையான உணவு பழக்கத்துடன், உடலுக்குத் தகுந்த உடற்பயிற்சியும் இருந்தால் நீங்கள் "சஞ்சீவி" ஆக வாழலாம். குறிப்பாக


  • நடைப்பயிற்சி (Walking), 
  • மெல்லோட்டம் (jogging), 
  • சைக்கிள் பயிற்சி (Cycling), 
  • நீச்சல் பயிற்சி GYM-3(Swimming) 


போன்ற பயிற்சியின் வழியாக நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை வலுவாக்க முடியும்.

சரியான முறைப்படி செய்யப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாத்து உடல் ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. அனுதினமும் 30 நிமிடங்களுக்கு குறையாமல்,  தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும்.

 important of exercise


வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை கட்டாயம்  உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால், நிச்சயமாக 100%   ஆரோக்கியமாக வாழலாம். உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், உடற்பயிற்சிக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து, அன்றாட வாழ்க்கை முறையை நல்ல ஆரோக்கியமான உணவு திட்டம் மற்றும் போதுமான முறையான, சரியான உடற்பயிற்சி என்ற முறையில் மாற்றிக்கொண்டால் ஆரோக்கியம் என்பது உங்கள் வாசல் தேடி வந்துவிடும்.

உடற்பயிற்சிக்குப் பின் செய்யக்கூடாதவைகள்:


உடற்பயற்சி செய்தாகிவிட்டது. அவ்வளவுதான் என்று நினைத்தால் கட்டாயம் உங்களை நீங்கள் இப்படி மாற்றிக்கொள்ள வேண்டும். அன்றாட உடற்பயிற்சிக்குப் பிறகு செய்ய வேண்டியவைகளை செய்யாமல் விட்டுவிட்டால், உடற்பயிற்சி செய்வதே வீண் என்ற நிலைமை ஏற்பட்டுவிடும். உடலுக்கு கடினமான உடற்பயிற்சியை கொடுத்துவிட்டு, மறுநாள் போதுமான ஓய்வு கொடுக்காவிட்டால், அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

அவ்வாறு ஓய்வு கொடுக்காமல் தொடர் உடற்பயிற்சி செய்வதால் பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர் கட்டாயம் "ரிலாக்ஸ்" செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் கடினமான உடற்பயிற்சிகளின் போது உடலுறுப்புகளுக்கு ஏற்பட்ட அழுத்தம் விலகி இயல்பான இயக்கம் கிடைத்திடும். மேலும் அதிக இரத்த அழுத்தம் குறைந்து, இயற்பான நிலைமைக்கு வந்துவிடும்.

உடற்பயிற்சி முடிந்த பின்னர் உடனடியாக உடைகளை மாற்ற வேண்டும். ஏனென்றால் உடற்பயிற்சியின்போது அதிக வியர்வை வெளியேறி உடைகளை நனைத்திருக்கும். அதில் பாக்டீரியாக்கள் உருவாகும். தொடர்ந்து அதை அணிந்திருக்கும்போது சருமம் பாதிக்கப்பட்டு, தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியர்வையில் நனைந்த உடைகளை நன்றாக துவைத்து சூரிய ஒளி படும்படி காய வைக்க வேண்டும். இதனால் பாக்டீரியாவால் ஏற்படும் சரும பாதிப்பை தவிர்த்திடலாம்.

பிறகு சிறிது நேரத்தில் குளியலை முடித்து விட வேண்டும். இல்லையெனில் சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, அது தோல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே உடற்பயிற்சிக்கு பிறகு அணிந்திருந்த ஆடைகள் அனைத்தும் துவைத்து போடுவது, குளிப்பது மிக மிக நல்லது.

வியர்வை வெளியேற வெளியேற உடற்பயிற்சி செய்துவிட்டு, சிலர் போதிய அளவு தண்ணீர் குடிக்க மாட்டார்கள் இதனால் உடற்பயிற்சியின்போது கடுமையான காயம் கண்ட தசைகள் ஓய்வு இயல்பு நிலைக்குத் திரும்பாது. எனவே எந்தளவுக்கு தண்ணீர் குடிக்க முடியுமோ அந்தளவிற்கு தண்ணீர் குடியுங்கள். அப்போதுதான் உடல் பழைய நிலைமைக்கு திரும்பும்.

கடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு அன்று இரவு முழுவதும் சரியாக தூங்காமல் இருக்க கூடாது. அப்படி தூங்காமல் போதிய ஓய்வு எடுக்காமல் இருந்தால் தசைகளுக்குத் தேவையான ஓய்வு கிடைக்காது. உடற்பயிற்சிக்குப் பிறகு போதிய தூக்கம் கிடைத்தால் தான் காயம்பட்ட திசுக்கள் மறு சீரமைப்பு பெற்று புதிய திசுக்கள் உருவாகும். சரியாக தூங்காமல் சென்றால் மறுநாள் உடற்பயிற்சி செய்வதில் சுணக்கம் ஏற்படும். எனவே தவறாமல் போதுமான தூக்கம் தூங்க வேண்டும். நல்ல நிம்மதியான தூக்கம் தான் அடுத்த நாள் புத்துணர்வுடன் எழுந்து உடற்பயிற்சி செய்திட சரியான உடல்/மன நிலையை கொடுக்கும்.

இதய நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சி 


உடற்பயிற்சியைப் பற்றி அதிகம் பேசுவோருண்டு. ஆனால் அதை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் உடல் பலகீனம் மிக விரைவில் அடைந்து பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இதய நோய்க்கு ஆட்பட்டு வெகு விரைவில் இந்த உலகை விட்டு விடைபெறுகின்றனர்.

ஒருவரின் உடல் அமைப்பு, வயது ஆகியவற்றிற்கு ஏற்ப உடல் பயற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இதய நோய்களிலிருந்து, அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும். அவை வராமல் தடுக்க முடியும். தினமும் அந்த பயற்சிகளை முறையாக/சரியாக பின்பற்ற வேண்டும்.

சிறு வயதிலிருந்தே உடற்பயற்சிகளை மேற்கொண்டு, இதய நாளங்களை வரிவடையச் செய்து, எந்த வயதிலும் அவைகள் இயங்கும் வண்ணம் தயார் நிலையில் வைத்திருக்கலாம். இதன் மூலம் இதயத்தின் முதன்மை குழாய்களில் இரத்த ஓட்டம் அடைப்பு ஏற்பட்டு தடை ஏற்படும்பொழுது, இந்த இணைக் குழாய்கள் உடனடியாக செயல்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படாமல் நம்மை உயிர் காத்துக்கொள்ள முடியும்.

தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு வருவதை தடுத்து விட முடியும். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத் தமனிகள் முழுமையாக அடைபட்டுவிடுவதுதான். இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான் இதய அடைப்புக்கு மிக முக்கிய காரணம். .

அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்கி, இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்லும்போது இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை சேர்த்து அடித்துச் செல்கிறது.

இதனால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதயத் தமனி நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும்.

Post a comment

0 Comments